2019ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி மத்திய அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த ஒதுக்கீடு மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்கள், அமைப்புகளில் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டாலும், மாநில அரசுகள் இந்த ஒதுக்கீடு தேவையற்றது எனக் கருதினால் செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்தது.
அவ்வாறு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டாம் என்று முடிவுசெய்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தையடுத்து மாநில அரசு இம்முடிவை எடுத்தது.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த புதிய ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வங்கிப் பணியாளர் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் கட்டயாமாக வருமானம் மற்றும் சொத்துச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதை வாங்குவதற்கு மாணவர்கள் முயற்சி செய்தனர். அப்போதுதான் தமிழ்நாடு அரசு வருமானச் சான்றிதழ் வழங்க தடைவிதித்திருந்தது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தேர்வில் தேர்ச்சியடைந்த சுதர்ஷன் என்ற மாணவன் கூறுகையில், "அண்மையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக வருமானம் மற்றும் சொத்துச் சான்றிதழ் யாருக்கும் வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் தாசில்தார்கள் சான்றிதழ் தர மறுப்பு தெரிவிக்கின்றனர். ஐபிபிஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற என்னைப் போன்ற சுமார் 100 மாணவர்கள் தற்போது இச்சிக்கலில் தவித்துவருகின்றனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்" என்றார்.
இதுதொடர்பாகப் பேசிய தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் கே.டி.ராகவன், "தமிழ்நாடு அரசு இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மத்திய அரசு வழங்கும் இடஒதுக்கீட்டில் இளைஞர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை மாநில அரசு ஏன் தடுக்க வேண்டும்.
இது வருங்காலத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை வெகுவாகப் பாதிக்கும். நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றாதது அரசியலமைப்புக்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.