இந்த நூற்றாண்டில் மனித இனத்தால் மிகவும் கொண்டாடப்படுவது சமூக வலைதளங்கள். கருத்துச் சுதந்திரத்தின் உச்ச நிலையே சமூக வலைத்தளங்கள். நாம் சந்தித்த கசப்பான அனுபவங்கள், உலகத்திலேயே நாம் வெறுக்கும் நபர், பல்வேறு விவகாரங்களில் நமது அபிப்ராயம் என அனைத்து கருத்துகளையும் நாம் அதில் பதிவிடலாம். அது குறித்த உரையாடலை நாம் ஆரோக்கியமாக செய்ய சிறந்த தளங்கள் பல உள்ளன.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க நூற்றாண்டு காலமாக இருந்தது ‘ஊடகங்கள்’ மட்டுமே. ஆனால், பொதுமக்களுக்கும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்குமான இடைவெளியைக் குறைக்க கிடைத்த வரப்பிரசாதம் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்.
அந்த வகையில் மில்லினியம் ஜெனரேஷனுக்கு இணையாக தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் சுஷ்மா ஸ்வராஜ் ஆக்டிவ்வாகவே இருந்தார். உதவி தேவைப்படுவோருக்கு மின்னல் வேகத்தில் பதிலளிப்பது அவரது தனிச் சிறப்பு. சுஷ்மா இந்திய அரசியலில் தனித்த ஆளுமையாக இருந்தபோதிலும், எந்த ஒரு தலைக்கனமுமின்றி, உதவி என சாமானியன் கேட்கும்போது தன்னால் இயன்றவற்றை எந்த தாமதமுமின்றி உடனே செய்தார்.
சாமானியர்களுக்கு பெரிதும் உதவிய சுஷ்மாவின் தந்தை ஹர்தேவ் ஷர்மா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்ததால் சுஷ்மாவின் ரத்தத்திலேயே அரசியல் கலந்திருந்தது. ஏழு முறை தொடர்ந்து மக்களவை உறுப்பினராக இருந்த சுஷ்மா தனது உடல்நிலை காரணமாக அரசியலைவிட்டு விலகியிருந்தாலும், நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனது கருத்தினையும், எதிர்ப்புக் குரலையும் ட்விட்டரில் பதிவிட்டுக்கொண்டே இருந்தார்.
மக்களுக்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதுதான் ஒரு நல்ல தலைவருக்கு அழகு.
அந்த வகையில், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானை உளவு பார்த்ததாக வழக்குத் தொடரப்பட்டபோது, அவரது குடும்பத்தினர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்தனர். அப்போது, இளகிய மனதோடு குல்பூஷன் ஜாதவிற்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டுமென அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதேபோல், கார்கில் போரில் உயிர்நீர்த்த வீரர்களுக்கு வீர வணக்கங்களையும் தனது பக்கத்தில் பதிவு செய்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும், பாஜக அரசு முத்தலாக் சட்டத்தைத் தடை செய்தபோது தனது ஆதரவுக் குரலை எழுப்பி பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கடைசி மூச்சு உள்ளவரை சுஷ்மா ஸ்வராஜ் இந்த தேசத்தையும், தேச மக்கள் நலனையும் நினைத்துக்கொண்டிருந்தார். ஆம், சுஷ்மா இறப்பதற்கு முன்பு ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதசங்களாகப் பிரிக்கப்பட்டது தன் வாழ்நாள் கனவு என்றும், இந்த நாளுக்காக வாழ்நாள் முழுவதும் தான் காத்துக் கொண்டிருந்ததாகவும் நெகிழ்ச்சியாக ட்வீட் செய்திருந்தார்.
ஆனால் அந்த ட்வீட் செய்த சில மணிநேரங்களிலேயே சுஷ்மாவின் உயிர் பிரிந்தது.
மில்லினியம் ஜெனரேஷனுக்கு சற்றும் குறையாமல் தனது உயிர் பிரியும் கடைசி நேரம்வரை சுஷ்மா ஸ்வராஜ் தன்னை அப்டேட்டாக வைத்திருந்ததோடு மட்டுமில்லாமல், தன் தேசத்தின் சுக, துக்கங்களில் அவர் பங்கேற்றுள்ளார். சென்று வாருங்கள் சுஷ்மா...