குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் மைய களமாக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் விளங்கி வருகிறது. இங்கு நடைபெற்ற போராட்டத்தில் பெரும்பாலாக பெண்களும் குழந்தைகளும் கலந்துகொண்டனர். மூன்று மாதத்திற்கு மேலாக இங்கு போராட்டம் நடைபெற்றது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், "மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் வகையில், பொது இடங்களில் இப்படி நீண்ட நாள்களுக்கு போராட்டம் நடத்தலாமா? இது குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. எஸ்.கே. கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ண முராரி ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, "ஜனநாயகத்தில் எதிர் கருத்துக்களை தெரிவிக்கலாம். இருப்பினும் இதுபோன்ற போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது" என நீதிமன்றம் தெரிவித்தது.
இது குறித்து நீதிமன்றம் மேலும் கூறுகையில்,"ஷாஹீன் பாக்கோ அல்லது வேறு இடமாக இருந்தாலும் சரி, பொது இடங்களை நீண்ட நாள்களுக்கு ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. இதனை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இம்மாதிரியான போராட்டங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரியான பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வதை அரசு தடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அரசு காத்திருக்க வேண்டாம்.
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு உரிமை உண்டு. அது குறிப்பிட்ட இடங்களில்தான் நடத்த வேண்டும்"என தெரிவித்தது.
கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, "போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சாலை மறியல் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில், நாடாளுமன்றத்திலும் சாலையிலும் போராட்டம் நடைபெறலாம். சாலையில் நடைபெறும் போராட்டம் அமைதியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரே மாதிரியான தீர்வினை வழங்க முடியாது" என அமர்வு கருத்து தெரிவித்தது.