மும்பை: சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்ப வேண்டாம் என ஊடகங்களை மும்பை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர்கள் 8 பேர் மற்றும் சில சமூக ஆர்வலர்கள் இணைந்து இரண்டு பொது நல வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இதில் ஐபிஎஸ் அலுவலர்கள் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் மிலிந்த் சதே, சுஷாந்த் சிங் மரண வழக்கில் ஊடகங்கள் மும்பை காவலர்களை தவறாக சித்தரித்து செய்தி வெளியிடுகின்றன. ஊடகங்கள் தங்கள் கைகளில் இந்த வழக்கை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து வருகின்றன. காவலர்களை சதிகாரர்கள் போல் காட்ட முற்படுகின்றன என்றார்.
மேலும், இந்த வழக்கை தொடுத்தவர்களுக்கு அதை விசாரணை செய்யும் அலுவர்கள் யார் என்றுகூட தெரியாது. குற்றவாளி யார்? பாதிக்கப்பட்டது யார்? என்றும் தெரியாது. ஆனால், இங்கு ஊடக தர்மம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மனதில் வைத்தே இவ்வழக்கை தொடுத்துள்ளனர் என்றார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஏ. செய்யது, எஸ்பி தவேட் அடங்கிய அமர்வு, சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான ஆய்வில் ஊடகங்கள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விசாரணையில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செய்திகளை பரப்பக்கூடாது என எச்சரிக்கை விடுத்தது.