உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் ஆஷியானா காலனியில் வசிக்கும் ஆஸ் முகமது கான், நூடுல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கான இரண்டு மாத கரண்ட் பில்லை செலுத்த மின்சார துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவரிடம் ரூபாய் 3 ஆயிரத்து 410 ரூபாய்க்கான பில்லை வழங்கியுள்ளனர்.
பணத்தை செலுத்த காசாளரிடம் கான் செல்கையில், அவர் வழங்கிய புதிய பில்லை பார்த்து கான் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பில்லின் தொகை 1 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆகும்.
இதையடுத்து, உடனடியாக அங்கிருந்தவரிடம் பில் தவறாக வந்துள்ளதை கான் தெரிவிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், ஒருவரும் கானின் பேச்சை கவனிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.
இத்தகைய நிகழ்வுகள் கானுக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல இடங்களில் மின்சார பில் தவறாக வந்து கொண்டிருக்கிறது. அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் நிகழும் இச்சம்பவங்கள் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஹப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு, அனுப்பப்பட்ட மின்சார பில் ரூ.1,28,45,95,444 ஆகவும், மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தை சேர்ந்த பணிப்பெண்ணுக்கு அனுப்பப்பட்ட பில் சுமார் ரூ .1.25 லட்சமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.