ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஷிரடி சாய்பாபா கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், இதரச் செலவுகளுக்கும் நிதி வழங்க முடியாத நெருக்கடியான சூழலுக்கு கோயில் நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், "கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் 5ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும்.
இந்த மாதம் தொடங்கி 15 நாள்கள் முடிவடைந்துவிட்டன. ஆனால் இன்னும் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இங்கு தண்ணீர் விநியோகம் செய்யும் ஊழியர்களுக்குக் கடந்த நவம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் ஊதியம் வழங்கக்கோரி அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.
கடந்த 90 நாள்களாக கரோனா ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளதால் பக்தர்களிடமிருந்து நன்கொடை வரவில்லை. இதனிடையே நாள்தோறும் கோயிலில் பூஜை செய்ய 1 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதுவரை ஊரடங்கால் ஒரு நாள் மட்டும் ஒரு கோடியே 58 லட்சம் ரூபாய் கோயில் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும், இந்த நிதி நெருக்கடியைச் சமாளித்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்" என்றனர்.
இதையும் படிங்க:'முழு ஊரடங்கு அறிவித்த மூன்றே நாளில் 10,604 நபர்கள் மீது வழக்குப் பதிவு' - சென்னை காவல் ஆணையர்!