ஆன்லைன் மூலம் கல்வி பயிலும் மாணவர்களின் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசிதரூரும், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரான வைகோவும் தனியார் பள்ளிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து வைகோ கூறுகையில், ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் கேட்கும் மற்றும் பார்க்கும் திறன் குறைந்துவருவதாக ஆய்வுகள் கூறுகிறது.
மருத்துவ நிபுணர்களின் ஆய்வின்படி, ஆன்லைன் வகுப்பில் கல்வி பயின்றுவரும் மாணவர்களில் பெரும்பாலானோர் கண் சம்பந்ததப்பட்ட குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் ஒலி கேட்கும் கருவிகளை (ஹெட்போன்ஸ்) அதிகளவில் பயன்படுத்துவதால், அவர்களது கேட்கும் திறனும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது என்றார்.
மேலும், இந்திய அமைப்பு ஒன்றின் ஆய்வுப்படி, கிராமப்புறங்களில் உள்ள 4.4 விழுக்காடு வீடுகளும், நகரப் புறங்களில் உள்ள 23.4 விழுக்காடு வீடுகளுமே கணிணி வசதியைப் பெற்றுள்ளன. அதிலும் வெறும் 14.9 விழுக்காட்டினர் மட்டுமே இணைய பயன்பாட்டினைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் உள்ள 56 விழுக்காடு மாணவர்கள் இணைய வசதியுடன் கூடிய செல்போன்கள் இல்லாமல் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான இணைய வசதி கிடைப்பதில்லை. கேரளாவைச் சேர்ந்த மாணவன் ஒருவன் ஆன்லைன் வகுப்புகளுக்கான இணைய வசதி இல்லாத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டான். கர்நாடகாவைப் போன்ற சில மாநிலங்களே குழந்தைகளுக்கான இணைய வழிக்கல்வி பாதிப்பினை உணர்ந்து, ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆன்லைன் வகுப்பிற்கு தடை விதித்துள்ளது.
மத்திய அரசு அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை கொண்டுசேர்க்கும் வகையில், கல்வி தொலைக்காட்சிகளை உருவாக்கவேண்டும். இதில், தனியார் பள்ளிகளும் தங்களது மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த நேரம் ஒதுக்கவேண்டும். ஆன்லைன், மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக வகுப்புகளை நடத்த முதலில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கைவைத்துள்ளார்.
மேலும், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை கேரளாவில் மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ள தேர்வுகளை நிறுத்தவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில் மாணவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் தங்களின் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு தொடர்ந்து வற்புறுத்திவருவதாகவும், பிள்ளைகளை ஆன்லைன் வகுப்பிற்கு தயாராக இருக்கும்படி குறுந்தகவல்கள் மூலம் நிர்பந்திப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டிவரும் நிலையில், கர்நாடகாவைப் போல ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்கவேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்பிற்கென தனியாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.