நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற விவதத்தின்போது, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எத்தனை கோடி செலவாகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலங்கவை உறுப்பினர் பாவ்ஸியா கான் கேள்வி எழுப்பினார்.
அதற்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள வெளியுறவுத் துறையின் இணை அமைச்சர் முரளிதரன், "2015ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி 58 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களுக்கு ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுடன் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்த இந்தியாவின் பார்வையை முன்வைக்கவும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மற்ற நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தவும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உதவியுள்ளன.
காலநிலை மாற்றம், சர்வதேச பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு, அணு ஆயுத பரவல் உள்ளிட்டவற்றில் தற்போது உலக நாடுகளுக்கு இந்திய அதிக பங்களிப்பை செய்து வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அரசியலில் இருக்கும் குற்றவாளிகள்