கரோனாவுக்கு எதிராக போராடும் களப்பணியாளர்களுக்கு கரோனா தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. கரோனா பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பிலிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, பெங்களூருவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை புதிய முயற்சியை கையாண்டுள்ளது.
அந்த வகையில், மித்ரா என்று அழைக்கப்படும் இரண்டு ரோபோக்களை மருத்துவமனையில் நியமனம் செய்துள்ளனர். இந்த ரோபோக்கள் இரண்டு விதமான செயல்பாடுகளை திறம்பட செய்து வருகின்றன. முதல்கட்டமாக நுழைவு வாயில் அருகே நிறுவப்பட்டுள்ள முதல் ரோபோ மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் அனைவரையும் ஸ்கேன் செய்வது மட்டுமின்றி இருமல், சளி உள்ளதா என்பதையும் முழுமையாக ஸ்கிரீனிங் செய்யும். மேலும், அவரின் புகைப்படம், பெயர், பரிசோதனை முடிவுகள் அடங்கிய அனுமதி சீட்டை வழங்கி மருத்துவமனைக்குள் அனுமதியளிக்கும்.
மருத்துவமனைக்குள் நுழைபவர்கள் நோயாளிகள் எனில், அவர்கள் இரண்டாவதாக நிறுவப்பட்டுள்ள ரோபோவை அணுகி, அதன் மூலமாக ரோபோவில் உள்ள டிஸ்பிளே வழியாக மருத்துவர்களை தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவைப்படும் சிகிச்சையை மேற்கொண்ட பிறகு மருத்துவர்கள் வழங்கும் மருந்துச்சீட்டை ரோபோவின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ நியமிக்கப்பட்டதன் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளை நேரில் சந்திப்பதை முற்றிலுமாக தவிர்க்க முடியும். இதன் மூலம், கரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் நம்புகிறது. மருத்துவர்களின் பாதுகாவலனான மித்ரா ரோபோவின் செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்துள்ளது
இதையும் படிங்க: மருத்துவமனைக்கு முகக்கவசம் அணியாமல் சென்ற அமெரிக்க துணை அதிபர்!