குடும்பத்தாலும், பொதுசமூகத்தாலும் ஒதுக்கப்பட்டு வாழ்வதற்கே இடமில்லாமல் அலையும் நிலைதான் திருநங்கைகளுக்கு இன்னமும் இருந்துவருகிறது. இருப்பினும், திருநங்கைகளில் சிலர் பல தடைகளைத் தாண்டி சமூகத்தில் அங்கீகாரம் பெறுவார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராணி கின்னார். திருநங்கையாகிய ஆரம்பக் காலகட்டத்தில் சாலையோரங்களில் மக்களிடம் யாசகம் பெற்றே தன் அன்றாட வாழ்க்கையை கழித்துவந்துள்ளார். ஆனால், இவ்வாறு வாழ்வது பிடிக்காமல் தன் சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என்று முடிவெடுத்தார் ராணி.
அதன்படி, 2016ஆம் ஆண்டு ஆட்டோ ஓட்டுநரானார். ஆரம்பத்தில் திருநங்கையின் ஆட்டோவில் பயணம் செய்வதா என பொதுமக்கள் இவரது ஆட்டோவை தவிர்த்துவந்தனர். இதனையடுத்து, 2017ஆம் ஆண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றினார்.
இந்நிலையில், தற்போது சர்வதேச போக்குவரத்து நிறுவனமான உபெரில் கார் ஓட்டுநராக பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், மதிப்பு வாய்ந்த நட்சத்திர கார் நிறுவனத்தின் ஓட்டுநராக பணியாற்றவுள்ள இந்தியாவின் முதல் திருநங்கை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
ராணி குறித்து அவரது சக தோழி ஸ்நேகாஸ்ரீ கின்னார் கூறுகையில், “நான் ராணியை பார்த்துதான் கார் ஓட்டுநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். ராணியுடன் காரில் பயணம் செய்ய அனைத்து மக்களும் விரும்புகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அவரின் காரில் பயணம் செய்யும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகக் கூறுகிறார்கள்” எனக் கூறினார்.
சமூகம் ஆரம்பத்தில் திருநங்கைகளை ஒதுக்கினாலும், காலம் செல்லச் செல்ல ஏற்றுக் கொள்வது சிறந்த சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.