இந்திய, சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கிடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக அந்நாடு தகவல் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி நரவனேவுடன் நாளை எல்லைப் பகுதியான லேவுக்கு செல்லவிருந்தார். ஆனால், எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவிவருவதால் அவரின் பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், விரைவில் அவர் லேவுக்கு செல்வார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, ராணுவத் தளபதி நரவனே உயர் ராணுவ அலுவலர்களை ஜூன் 23,24 ஆகிய தேதிகளில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய வகையில் விளங்கிய டிக் டாக், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய சேனல்களின் ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது. போர் பதற்றம் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் 20 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவிடமிருந்து 33 புதிய போர் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்