மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. கமல்நாத் அரசு, காங்கிரஸ் மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்த இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இன்று அவர் பாஜகவில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் சேர்ந்து 20-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும் இணையப்போவதாகத் தெரிகிறது. இதனால் மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சி, கவிழும் அபாயத்தில் தற்போது உள்ளது.
இந்த அரசியல் குழப்பம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல், மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.
இது தொடர்பான தனது பதிவில், 'காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அரசை கவிழ்க்கும் வேலையில் கவனம்செலுத்தும் பிரதமர், சர்தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதைக் கவனித்தாரா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெட்ரோல் விலையை 60 ரூபாய்க்கும் கீழ் குறைத்து மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் உதவும் நடவடிக்கையை மேற்கொள்வாரா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா, நட்டாவுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை