பஞ்சாப் மாநிலத்தில் கோவிட் -19 தொற்று குறித்து அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் வீடியோ கான்பரன்சிங் மூலம் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது, கோவிட்-19 சிகிச்சைக்காக மாநிலத்தில், இரத்த வங்கி மற்றும் மாற்று மருத்துவத்தின் முன்னாள் தலைவர் நீலம் மார்வாஹாவின் மேற்பார்வை, வழிகாட்டுதல் கீழ் பிளாஸ்மா வங்கி அமைக்க அவர் ஒப்புதல் வழங்கினார்.
ஐசிஎம்ஆர் சோதனையின் அடிப்படையில் ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. சோதனைக்கு பதினைந்து நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் எட்டு பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் ஐந்து நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி (ஜூலை 9) கோவிட்-19 தொற்றால் 6907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4828 பேர் குணமடைந்துள்ளனர். 178 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் தற்போது 1901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.