புதுச்சேரியில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 40 நாள்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனிடையே, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பின் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததையடுத்தும், மத்திய அரசின் உத்தரவின்படியும் கட்டுமர மீனவர்கள் மட்டுமே தற்போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவருகின்றனர்.
விசைப்படகுகளை இயக்கத் தடைவிதித்துள்ள காரணத்தால் மீனவர்கள் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுக பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், வழக்கமாக மீன்பிடி தடைக்காலங்களில் தங்களின் படகுகளை பழுதுபார்க்கும் மீனவர்கள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் படகுகளை கவனிக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில் தேங்காய்த்திட்டு துறைமுகத்திலுள்ள விசைப் படகுகளில் வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைவதைத் தடுக்கும் பொருட்டு, படகின் உரிமையாளர்கள் பச்சை நிற துணி மூலம் படகுகளை மூடியுள்ளனர். மேலும் இந்தத் துணி படகினை புனரமைக்கும் பணியில் ஈடுபடுவோர் அக்னி நட்சத்திரத்தின் காரணமாக அதிகரித்துள்ள வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கும் பயன்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மீன் பிடி தடை காலத்தை ரத்து செய்யக் கோரிக்கை!