சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மக்களுக்கு தவறான தகவலை அளித்துள்ளதாக ஆளுநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள பதிவில், "சுகாதரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இன்று ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் மந்திரி சபை அனுமதி அளித்தும், ஏனாம் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதி உதவிகளை வழங்க துணை நிலை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்றும், இதனால் கடந்த ஐந்து நாள்களாக தூய்மைப் பணிகள் நடைபெறவில்லை, இந்த சுகாதார சீர்கேடுகளுக்கு துணை நிலை ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இது தவறான குற்றச்சாட்டு. மல்லாடி கிருஷ்ணராவ் மக்களுக்கு தவறான தகவல்களைத் தருகிறார். துணை நிலை ஆளுநர் கடந்த ஜுலை ஒன்றாம் தேதி ஏனாம் தொகுதிக்கு உண்டான மானிய உதவித் தொகையான 33.78 லட்சம் ரூபாயை வழங்கி அனுமதி அளித்துள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லாரி திருடிய நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!