புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ' புதுச்சேரியில் நான்கு பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். 2 ஆயிரத்து 167 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று பிரதமர் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் பேசியபோது, கரோனா தொற்றைக் கண்டறிய மருத்துவ உபகரணங்கள், மருத்துவருக்குத் தேவையான உடைகள், மருந்துகள், முகக்கவசங்கள் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், மாநிலத்திற்கு வழங்கவேண்டிய 360 கோடி ரூபாயை வழங்கவேண்டும் என்றும், புதுச்சேரி ரிசர்வ் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
வெளிநாடுகளில் படிக்கின்ற புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களை அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை செயல்படுத்தியதால் மத்திய அரசு 2,200 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்றும்; விவசாயக் கமிட்டியில் விற்கப்படும் விதைகளுக்கான மானியத்தை 25 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக மாற்றவேண்டும் என்றும் கோரியுள்ளேன்.
சிறு, குறு தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தை மத்திய அரச வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: இனி யாரும் காவல் துறையிடமிருந்து தப்பிக்க முடியாது... வந்துவிட்டது 'ஸ்மார்ட் காப்' செயலி