புதுச்சேரி 30-வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, அங்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில், பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்த போக்குவரத்து துறை திட்டமிட்டது.
அதன்படி, இன்று (பிப்.9) புதுச்சேரி பாரதி பூங்காவில் அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வந்திருந்தனர்.
போக்குவரத்து துறை சார்பில் அவர்களுக்கு ஓவியம் வரைவதற்கான பொருட்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் பல்வேறு தலைப்புகளைக் கொண்டு ஓவியங்களை வரைந்தனர்.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நாளை (பிப்.10) நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் அவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.