புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து 19ஆவது நாளாக விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச நுழைவு வாயிலில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆறு பேர் கொண்ட ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் குழு போராட்டத்தில் கலந்துகொள்ள அங்கு சென்றது. ஆனால், அவர்களைப் போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்காமல் விவசாயிகள் திருப்பியனுப்பினர்.
பின்னர் பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ.) தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "விவசாயிகளின் ஒற்றுமையை உடைக்க அரசு விரும்புகிறது. அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள வருகிறார்கள். மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்துவரும் போராட்டம் 'வரலாற்றுப் போராட்டம்' ஆகும்.
இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட உள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகளும் போராட்டங்களை நடத்துவார்கள். ஹரியானாவின் சார்க்கி தாத்ரி சட்டப்பேரவைத் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சோம்வீர் சங்வான், ஷாடிபூர் ராஷ்டிரிய பால்மிகி மகா சங்கத்தின் தலைவர் மதன் லால் பால்மிகி ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம்: குழுத் தலைவர்களுடன் ரகசியம் பேசிய அமித் ஷா!