மும்பை நகரில் நேற்று வழக்கமான மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு கராணமாக பெருநகர மும்பைக்குள்பட்ட தானே, ராய்காட், பால்கர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
இந்த மின்தடை காரணமாக பெருநகர மும்பையில் வசிக்கும் 65 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்தனர். மும்பையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற ஒரு மெகா மின்வெட்டு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று மதியம், மும்பையில் சில பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுவிட்டாலும், இன்னும் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
கரோனா காரணமாக பலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சூழ்நிலையில், இந்த மெகா மின்வெட்டு ஏற்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் தடையைத் தொடர்ந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மின்சாரத் துறை அமைச்சர் நிதின் ரவுத், தலைமைச் செயலர் சஞ்சய் குமார், மின்சாரத் துறைகச் செயலர் ஸ்ரீவாஸ்தவா ஆகியோருடன் அவசர ஆலோசனையை நடத்தினார்.
இந்த மின் தடை தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் நிதின் ரவுத் வெளியிட்டுள்ள வீடியோவில், "மும்பையிலுள்ள சர்க்யூட் 1இல் சில வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்துவருகின்றன. எனவே முழு மின் சுமையும் சர்க்யூட் 2க்கு மாற்றப்பட்டது.
ஆனால், அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மும்பை, தானேவின் பெரும்பகுதிகளில் மின்சார சப்ளே பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், மும்பை நகரில் ஏற்பட்டுள்ள இந்த மெகா மின்வெட்டு குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் ஜெனரேட்டர்களை சில மணி நேரம் இயக்க தேவையான டீசலை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதி முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் ஏற்பட்டுள்ள இந்த மின்வெட்டுக்கு பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: தற்சார்பு இந்தியா பொருளாதார நிதிச்சலுகை பெரும் தோல்வி: காங்கிரஸ் தாக்கு