இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்த இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு, நகரத்தை விட்டு வெளியேறினர். ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நாள்தோறும் கிடைக்கும் தினசரி கூலியை வைத்துகொண்டு வாழ்வை நகர்த்தி வந்த கூலி தொழிலாளர்கள், முழுமையான முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்த நிலையில் தங்களின் சிறு சேமிப்பும் தீர்ந்துவிட்டதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கூலி தொழிலாளர்களின் பட்டினிச்சாவுகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் சந்திரப்பூர் மாவட்டத்தை அடுத்துள்ளது ஜூனோனா பகுதியில் ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பை இழந்த நிற்கும் கூலித் தொழிலாளர் மயேஷ் நிசாத்தும் அவரது குடும்பத்தினரும் பசிக்கொடுமையில் இருந்து உயிர் தப்பி பிழைக்க மொஹ்புல் என்ற காட்டுப்பூவை மட்டும் சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 25 நாள்களாக வேலை வாய்ப்பின்றி, வாழ்வாதாரத்திற்குறிய பொருள் ஆதாரமும் இன்றி தவித்து வரும் மயேஷ் நிசாத், அவரது குடும்பத்தினரை காப்பாற்ற அதிகாலையில் எழுந்து, அவரின் பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று உயிருக்கு அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் மொஹ்புல் மலரை சேகரித்து வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். வீட்டிற்கு திரும்பியதும், அதைக் கொதிக்கவைத்து அதையே அவரும் அவரது மனைவி, மகனும் சாப்பிட்டு வருகின்றனர்.
ஏறத்தாழ 70 விழுக்காடு தொழிலாளர்களின் வாழ்விடமாக இருக்கும் இந்த ஜூனோனா பகுதியில் பெரும்பாலான மக்கள் கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். அவர்களில் பலரும் இதே வழியில் தமது பசியைப்போக்கிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் செய்தியாளரிடம் பேசிய கூலித் தொழிலாளர் மயேஷ் நிசாத் கூறுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தான் இந்த பகுதிக்கு நானும், எனது மனைவியும், பத்து வயது மகனும் இடம்பெயர்ந்தோம்.
அன்றாட தேவைகளை அன்றன்றைக்கு வரும் கூலியை வைத்து நகர்த்திக்கொண்டிருந்த எங்களுக்கு இந்த ஊரடங்கால் வேலைவாய்ப்பு பறிபோய் வாழ்வாதாரம் முற்றிலுமாக நலிவுற்றது. வீட்டில் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லை. கடைகளில் இருந்து மளிகைப் பொருட்களை வாங்க பணமும் இல்லை.
கடன் கேட்ட இடங்களில் உதவி எதுவும் கிடைக்கவில்லை. கொஞ்சம் பணம் உதவி செய்தவர்கள் கூட இப்போது பணம் கொடுக்க மறுத்து வருகின்றனர். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தவித்து வந்த எனக்கு ஒருவர் இந்த மொஹ்புல் காட்டுப்பூ குறித்து தகவல் சொன்னார்.
பல தொழிலாளர்கள் இதனை சாப்பிடுவதாக கேள்விப்பட்டேன். எனவே அன்று முதல் முறையாக, நானும் எனது மகனுடன் ஜூனோனா காட்டுக்கு வந்து இந்த மொஹ்புல் காட்டுப்பூக்களைச் சேகரித்து வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிடத்தொடங்கினோம். முதலில், கொஞ்சம் குமட்டலாக இருந்தது. பின்னர் சிறுப்பருப்புடன் அவற்றை சேர்த்து வேகவைத்து சமைத்து சாப்பிட்டோம். தற்போது வரை எங்களால் காய்கறிகளை வாங்க முடியாத பெரும் நெருக்கடி நிலைதான் தொடர்கிறது”, என்றார்.
வாட்டும் வறுமையில் இருந்தும் கோரப்பசியில் இருந்தும் தங்களை தற்காத்துக்கொள்ள அவர்களுக்கு வேறு வழியில்லாத சூழலில் மொஹ்புல் சேகரிக்க செல்லும்போது போது காட்டில் உள்ள புலி, கரடி, பிபிடா போன்ற விலங்கள் தாக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர்.
நலிவடைந்திருக்கும் கூலித்தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க : பழங்குடியினரைச் சேராத அரசுத் திட்டம் - இலைகளை முகக்கவசமாகப் பயன்படுத்தும் அவலம்!