பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியிலிருந்து 1954ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி புதுச்சேரி விடுதலைப்பெற்றது. ஆகஸ்ட் 16ஆம் தேதி புதுச்சேரியில் அரசு சார்பில் சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டுவந்தது. இதற்கு பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நவம்பர் ஒன்றாம் தேதியே புதுவை விடுதலை தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து நவம்பர் ஒன்றாம் தேதி புதுச்சேரியின் விடுதலை நாள் கொண்டாடப்படும் என ரங்கசாமி முதலமைச்சராக இருந்தபோது அறிவித்திருந்தார். அதன்படி, ஆண்டுதோறும் புதுச்சேரியில் நவம்பர் 1ஆம் தேதி அம்மாநில விடுதலை நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி, இந்தாண்டும் இன்று (நவம்பர் 1) அரசு சார்பில் கொண்டாடுவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி, இரவு புதுச்சேரி கடற்கரை சாலை, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலக கட்டடம் சட்டப்பேரவை வளாகம், கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை, தலைவர்கள் சிலைகளுக்கு மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் கண்கவரும் வகையில் வண்ண மின்விளக்குகள் அமைக்கப்பட்டதால் புதுச்சேரி விழாக்கோலம் பூண்டது.
கண்களைக் கவரும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கட்டடங்களைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். புதுச்சேரி விடுதலை நாளையொட்டி இன்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 'மைசூர் மாளிகை'!