கவிஞர் சதீஷ் பிரபு எழுதிய ‘பீச்சாங்கை’ எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற, ‘மலம் அள்ளுபவன் கைகளில் எந்தக் கை பீச்சாங்கை’ எனும் வரிகள் படிப்பவர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களை கண்டுகொள்ளாமல் இந்த பொதுச் சமூகம் எத்தனை காலம் நழுவப் போகிறது.
கொல்கத்தாவில் ஒரு மருத்துவர் தாக்கப்படுகிறார், இந்திய மருத்துவர்கள் சங்கம் அந்த பிரச்னையை பெரிதாக்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இந்தியா ஊடகங்கள் பலவற்றிலும் அந்தச் செய்தி பெரிய அளவில் கவனம் பெறுகிறது. ஆனால் 7 துப்புரவுத் தொழிலாளிகளின் மரணம் இந்தியச் சமூகத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அதேபோல் பெரும்பான்மையான ஊடகங்களின் கவனத்தைப் பெறாமல் போகிறது என்றால், இங்கே உயிரின் மதிப்பு எதை வைத்து அளவிடப்படுகிறது.
துப்புரவுத் தொழிலாளர்களின் இழிவு நிலையைப் போக்க சமூக ஆர்வலர்கள் பலரும் போராடி வருகின்றனர். பெஜவாடா வில்சன் அதில் மிக முக்கியமானவர், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்துக்கு எதிராக சஃபை கர்மச்சாரி அந்தோலன் (Safai Karmachari Andolan (SKA) எனும் இயக்கத்தை நிறுவிப் போராடி வருகிறார்.
மலம் அள்ளுபவர்களின் அவலநிலையை உணரக் கொஞ்சமேனும் சிந்தித்தால் போதுமானது. நம் மலத்தை நாம் எந்தவித அருவருப்புமின்றி அள்ளத் துணிவோமா? பின்னர் சக மனிதனை அந்த நிலைக்குத் தள்ளுவது எவ்வளவு மனிதத்தன்மையற்ற செயல் என்பதை உணர வேண்டும். 1993ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளப் பணிப்பது குற்றம் எனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய, மாநில அரசாங்கங்களால் அது சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை. பின்னர் பெஜவாடா வில்சனின் ஓயாத போரட்டத்தால், 2013ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் எந்த பயனும் இல்லை, இந்த அவலநிலை இன்னும் தொடருகிறது. இந்த இழி தொழிலைச் செய்யச் சொல்லி சக மனிதனை வதைப்பதில் சாதியத்தின் பங்களிப்பும் உள்ளது.
இந்திய பிரதமராக இருக்கும் மோடி தனது ‘கர்மயோகி’ புத்தகத்தில், வால்மீகி எனும் தலித் மக்களுக்கு மலம் அள்ளுவது ஆத்மீக அனுபவத்தை தரும் என குறிப்பிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது துப்புரவுத் தொழிலாளர்கள் பாதங்களைக் கழுவிய மோடி, அவரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 7 துப்புரவுப் பணியாளர்கள் இறந்ததைப் பற்றி வாயைக்கூடத் திறக்கவில்லை. இனி அடுத்த தேர்தலுக்கு மீண்டும் துப்புரவுத் தொழிலாளர்களின் பாதத்தைக் கழுவ வரும்போதுதான் இப்படியான மனிதர்கள் இருப்பது அவர் கண்களுக்குத் தெரியும் போல...
ஒரு தாய் தன் குழந்தையின் பின்புறத்தை சுத்தம் செய்வது போன்றதுதான் மலம் அள்ளும் தொழிலும் என இந்தியாவின் தந்தை என அழைக்கப்படும் காந்தி சொன்னதை சுட்டிக்காட்டி தலித் மக்களை இந்த இழி தொழிலை செய்யச் சொல்கிறது அதிகாரவர்க்க கும்பல் என பெஜவாடா வில்சன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இதற்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்த இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. இதுகுறித்து பெஜவாடா வில்சன், தலித் மக்கள் இறந்த மிருகங்களின் உடல்களை சுமக்கும் பணியை செய்யாதீர்கள், மலம் அள்ளுவது போன்ற அசிங்கமான தொழில்களில் ஈடுபடாதீர்கள் என அம்பேத்கர் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அதில் தலித் மக்களுக்கு மட்டும் அம்பேத்கர் இந்தக் கோரிக்கையை வைத்திருப்பது இந்திய சமூகத்தின் மற்றொரு முகத்தை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
மலம் அள்ளும் தொழிலில் சக மனிதனை ஈடுபடுத்துவதை எதிர்த்து பொதுச் சமூகம் ஒன்றிணைந்து குரல்கொடுக்காதவரை இந்த இழிநிலை ஓயப்போவதில்லை.