வட இந்தியாவில் வெட்டுக்கிளித் தாக்குதலின் அச்சுறுத்தல் நிலவுகையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 'ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் பிப்ரவரி முதல் வெட்டுக்கிளிகளின் தாக்கம் இருந்து வருகிறது.
குஜராத், மகாராஷ்டிராவில் வயல்களில் உள்ள பயிர்களை இந்த வெட்டுக்கிளி அதிகம் சேதப்படுத்தியது. இதனால், அங்கு அதிக அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டு நிலைமை மோசமடைந்துள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை (மே 27) டெல்லியில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பூச்சிக்கொல்லி தெளிக்க அறிவுறுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அந்த மாநிலத்தில் இருக்கும் விவசாயிகள். எனவே, தன்னார்வத் தொண்டு நிறுவனம், இந்த தீர்ப்பாயத்தின் ஆதரவை நாடுகிறது.
வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலன் அமைச்சகம், தாவரப் பாதுகாப்பு, தனிமைப்படுத்துதல் மற்றும் சேமிப்பு இயக்குநரகம் உள்ளிட்ட துறைகள் தயாரிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவது குறித்த நிலை அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்து நல்ல முடிவை வழங்க வேண்டும்.
வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நோக்கத்திற்காக ட்ரோனுடன் கூடிய பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் கருவிகளை வழங்கிட வேண்டும். வெட்டுக்கிளிகள் தாக்குதலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பீடு செய்து, இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுககு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.