கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சக்காய் என்ற இடத்தில் மூன்று வயதுள்ள பொமரேனியன் இன நாய் ஒன்று அனாதையாக சுற்றித் திரிந்துள்ளது. அந்த நாயை பி.எஃப்.ஏ. என்ற அமைப்பைச் சேர்ந்த ஷாமீன் என்பவர் மீட்டுள்ளார். அப்போது அதன் காலரில் இணைக்கப்பட்ட குறிப்பைப் படித்ததும் அதிர்ந்தே போனார்.
மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் குறிப்பில், "இது உயர் ரக இனத்தைச் சேர்ந்த நாய்; குறைவான அளவே இது உணவை உட்கொள்ளும். மேலும் இந்த நாய் அதிகம் குரைத்தாலும் இதுவரை யாரையும் கடித்ததில்லை. இந்த நாயை நாங்கள் வீட்டைவிட்டு துரத்துவதற்கான காரணம் என்னவென்றால், இது பக்கத்து வீட்டு நாயுடன் தொடர்ந்து உறவில் ஈடுபட்டுவந்தது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்து ஷாமீன் ஒரு கணம் அதிர்ந்துதான்-போனார். இதுவரை காயம் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோத்தான் நாய்கள் வீட்டைவிட்டுத் துரத்தப்படும். முதன்முறையாக எதிர்பாலின நாயுடன் உறவு காரணமாக வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட வினோத நிகழ்வு தற்போது நடந்துள்ளது.
தற்போது இந்த நாயை ஷாமீன் தத்தெடுத்து பாதுகாத்து வந்தாலும் தனது பழைய உரிமையாளரை எதிர்நோக்கி வழி மீது விழி வைத்து பரிதாபமாக காத்திருக்கிறது இந்த பொமரேனியன்!