பாகிஸ்தான் மாநிலம் பெஷாவர் அருகே உள்ள கைபர் பக்துன்த்துவா மாகாணத்தில் சோன்ஹேரி மசூதி எனப்படும் தங்க மசூதி உள்ளது. பாரம்பரியம் மிக்க இந்த மசூதியில் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு மேற்கொள்ள பெண்களுக்கு 25 ஆண்டுகளாக அனுமதிக்கப்படவில்லை.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் வழிபடுவதற்கான சூழல் இருந்த நிலையில், அப்பகுதி தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக, மசூதிக்கு அருகே கடந்த 25 ஆண்டுகளில் 12க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு சட்டஒழுங்கு மேம்பட்டுள்ளதால், தற்போது மசூதியில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மசூதி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள பெண்கள் தரப்பில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நூறாண்டுகள் பாரம்பரியமிக்க இந்த மசூதி பெண்களை வழிபட அனுமதியளித்துள்ளது நல்ல முன்னேற்றமாக அங்கு பார்க்கப்படுகிறது. பொதுவாக பெரும்பாலான மசூதி உள்ளிட்ட இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பெஷாவர் மசூதியின் இம்முடிவு நல்ல மாற்றத்திற்கானது என சர்வதேச அமைப்புகளும் பாராட்டிவருகின்றன.
இதையும் படிங்க: இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரின் நட்பும் வளர்ச்சியும்