கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அத்தியாவசிய பொருள்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மாநில அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, உள்ளூர் சந்தைகளில் அத்தியாவசிய பொருள்கள் நியாய விலையில் கிடைக்க திட்டம் வகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ராபி பருவம் தொடங்கவுள்ள நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கோதுமையை கொள்முதல் செய்வதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கொள்முதலின்போது சமூக இடைவெளி போன்ற கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இருப்பில் வைத்துக்கொள்ள போதுமான அளவு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொது விநியோக பயனாளர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு விலையில்லா ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் அரசு உறுதியாக உள்ளது - மத்திய அரசு