புதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்(37). தனியார் கார் கம்பெனியில் சூப்பர்வைசராக இருக்கிறார். இவருக்கு 6 மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது. இவரது மனைவி சண்முகசுந்தரி, பெற்றோரை பார்க்க சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி இரவு, வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய புருஷோத்தமன் வரும் வழியில் சாப்பிட பரோட்டா பார்சல் வாங்கி கொண்டு வந்துள்ளார்.
அதனை சாப்பிடுவதற்கு பொட்டலத்தை பிரித்து வைத்து, சாப்பிட்டு கொண்டே போனில் அவரது மனைவியிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென புருஷோத்தமனுக்கு விக்கல் வந்துவிட்டது. திடீரென்று சத்தம் ஏதும் கேட்கவில்லை என்றதும் பதறிப் போன சண்முகசுந்தரி, ஊரில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து வீட்டிற்க்கு சென்று பார்க்கும்படி கதறியவாறே கூறினார்.
இதையடுத்து, விரைந்து வந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் உள்ளிட்டோர் உள்பக்கம் பூட்டியிருந்த கதவை உடைத்து சென்று பார்த்தபோது, வாயில் பரோட்டாவுடன் மயங்கிய நிலையில் இருந்தார் புருஷோத்தமன். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதற்கிடையே பரோட்டோ தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்ததாக மருத்துவ பரிசோதனைகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.