நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. பொது கூட்டங்கள், நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
அந்த பதிவில், " நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் நாடாளுமன்ற குழுக்களின் கூட்டங்கள், மழைக்கால கூட்டத்தொடர்களை நடத்துவது குறித்து பல முறை விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் என நம்பிக்கை உள்ளது.
கரோனா தொற்றை கையாள நாடாளுமன்றத்தின் சில குழுக்கள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளன. கரோனா சூழல் காரணமாக நாடாளுமன்றத்தில் இருக்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கான திட்டமிடுதலுக்கு சிறிது கால அவசாகம் தேவைப்படும்.
மேலும், சமீபத்தில் நாடாளுமன்றத்தின் நிலைக்குழு கூட்டங்கள் நான்கு முறை நடைபெற்றது. அதில், வீட்டு விவகாரங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பிரச்னைகள், தொற்றுநோயின் தாக்கம் என பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். அதுமட்டுமின்றி ஊடகங்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படுகிறது. இருவழித் தகவல் தொடர்புகளை இயக்குவதன் மூலம் நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக கருதப்படுகிறது. இந்த தொற்று காலத்தில் ஊடகங்கள் பங்கு மிகவும் முக்கியத்தவம் வாய்ந்தவை" என்றார்.