ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மேற்குவங்கம் ஆகிய அண்டை நாடுகளில் மதத்துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவரும் சிறுபான்மை மதத்தவருக்கு எளிதில் குடியுரிமை பெற்றுத்தர குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) வழிவகைசெய்கிறது.
சமீபத்தில் அமலுக்குவந்த இந்தச் சட்டம் மேற்குறிப்பிட்ட நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதென நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கூட்டு வியூகம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள ஒருமித்த கொள்கைகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டமானது நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
சமாஜ்வாதி, சிவ சேனா ஆகிய கட்சிகளும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மேற்குவங்க முதலமைச்சரும், திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'சிஏஏ குடியுரிமையைக் கொடுக்கும் சட்டம், பறிக்கும் சட்டமல்ல' - அமித் ஷா விளக்கம்