கரோனா உலகையே திருப்பிப்போட்டுள்ளது. பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இச்சூழலில், ஆன்லைன் கல்வி மாற்றாக திகழ்ந்துவருகிறது.
பெரும்பாலான பள்ளிகள் இணையம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்துவருகின்றன. ஆனால், ஏழை, எளிய மாணவர்கள் இதனால் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளுக்காக பெற்றோர்கள் பெரிய அளவுக்கு செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதால் தங்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்பாலானோர் ஆன்லைன் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், பள்ளி நிர்வாகத்தின் அழுத்தத்தால் அவர்கள் உதவியின்றி தவிக்கின்றனர்.
ஆன்லைன் வகுப்புகளின் போது, பாடம் குறித்த சந்தேகம் எழுந்தால் அதனை தெளிவுப்படுத்த முடிவதில்லை என மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மோசமான இணைய சேவை அவர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்குகிறது. நெட்வொர்க் பிரச்னையின் காரணத்தால் முக்கியமான பாடங்களை படிக்க முடியவில்லை என மாணவர்கள் புலம்புகின்றனர்.
எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டமான பார்மரில், பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு குறித்த குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து பெற்றோரான தாலு ராம் சவுத்ரி கூறுகையில், "மோசமான இணைய சேவை இங்கு பெரும் பிரச்னையாக உள்ளது. குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தரும் அளவுக்கு பெற்றோர்கள் நல்ல நிலைமையில் இல்லை" என்றார்.
கிராமப்புறங்களில் ஆன்னைல் வகுப்புகளை நடத்துவது சாத்தியமில்லை என பெற்றோர் கவுசம் ராம் கூறுகிறார். கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்களால் ஸ்மார்ட்போன்களை வாங்க முடிவதில்லை. எனவே, அவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என ராம் கவலை தெரிவிக்கிறார்.
"நாங்கள் இருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகளே இல்லாதபோது, இணைய சேவை ஆடம்பரமான ஒன்றாக கருதப்படுகிறது" என பெற்றோரான பிரவீன் போத்ரா கூறுகிறார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் மனநல மருத்துவர் சோலங்கியை தொடர்புகொண்டு பேசுகையில், "ஆன்லைன் வழி கல்வி மாணவர்களை மன அழுத்ததிற்கு உள்ளாக்குகிறது. அவர்களால் கவனமாக படிக்க முடியவில்லை. உடல் ரீதியிலும் அது பெரும் தாக்கத்தை உள்ளாக்குகிறது" என்றார்.
பாரம்பரிய கல்விமுறைக்கு மாற்றே இல்லை. ஆனால், கரோனா காலத்தில் அது சாத்தியமில்லை. இச்சூழலில், எதுவும் இல்லாமல் இருப்பதற்கு ஏதேனும் இருப்பது நன்று. எனவே, ஆன்லைன் கல்விமுறைக்கு பழக மக்கள் தங்களைத் தானே தயார் படுத்துவருகின்றனர். இந்தமுறை, மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இருந்தாலும், இதில் பல சிக்கல்களும் சவால்களும் உள்ளன.
இதையும் படிங்க: தொழில்நுட்ப உதவி இல்லாமல் தவிக்கும் நூஹ் மாவட்டம்