உலக அளவில் கரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. பல நாடுகளின் முன்னனி விஞ்ஞானிகள் கரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா மருந்து விரைவில் மனிதர்கள் மீது பரிசோதிப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், கரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள காட்டு எறும்புகளை அரைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களின் இந்த உணவு முறை, கரோனாவிலிருந்து தப்பிக்க உதவும் என சில ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் கருதுகின்றனர். எறும்புகளை அரைத்து சாப்பிடும் இந்த உணவை ’கருப்பு பிஸ்மயர்’ என பழங்குடியின மக்கள் அழைக்கின்றனர். இந்த விழுதை உருவாக்க எறும்புகளைப் பிடித்து, மிளகாய், இஞ்சி, உப்பு, முட்டைகளுடன் சேர்த்து வைத்து அரைக்கின்றனர். காட்டு எறும்பு, அதன் முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் சளி, காய்ச்சல், தொண்டை வலி உட்பட பல பிரச்னைகள் சரியாகிவிடும் என உள்ளூர்வாசிகளும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர் நயதர் பாதியல் கூறுகையில், கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் சக்தி காட்டு எறும்புகளிடம் உள்ளது. ஆனால், இது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். எனக்கு ஐசிஎம்ஆரில் பணியாற்றும் ஆராய்ச்சியாளரிடமிருந்து பதில் கடிதமும் வந்துள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை ஆயுஷ் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பிரதமர் மோடி, சுகாதாரத் துறை அமைச்சகம், பல மாநில முதலமைச்சர்கள் என அனைவரும் காட்டு எறும்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த விழுதை மருத்துவப் பரிசோதனை செய்ய சிபாரிசு செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "நாங்கள் பல காலங்களாக காட்டு எறும்புகளையும், முட்டைகளையும் சாப்பிட்டு வருகிறோம். எறும்புகளை உட்கொள்வதால் கண்பார்வைத் திறன் அதிகரிக்கிறது. அதன் முட்டைகள் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மருத்துவ நன்மைகளையும் தாண்டி பழங்குடி மக்களின் இனத்தில் எறும்பு உணவை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறோம். இதனால், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வாராந்திர சந்தைகளிலும் விற்கப்படும் எறும்புகளையும் முட்டைகளையும் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.