இது குறித்து அம்மாநிலத்தின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் செயலர் மூலம், மாநில அரசின் அனைத்துத் துறைகளின்கீழ் உள்ள அலுவலகங்களிலும் புகார் அலுவலர் ஒருவரை நியமிக்குமாறு, அனைத்துத் துறைகளின் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்றாம் பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 - பிரிவு 11இன்படி, மூன்றாம் பாலினத்தவர் மீதான விதிமீறல்கள் தொடர்பான புகார்களைக் கவனிக்க அனைத்து அலுவலகங்களிலும் புகார் அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தச் சட்டம், வேலைவாய்ப்பு, கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம், பிற சேவைகளில் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான பாகுபாட்டைத் தடை செய்கிறது.
இந்தச் சட்டம் மாற்றுப் பாலினத்தவர் தங்களது பாலின அடையாளத்தை முழுமையாக உணர ஒருபுறம் வழிவகுத்தாலும், மாவட்ட மேஜிஸ்ட்ரேட்கள் வழங்கும் அடையாளச் சான்றிதழ்களின்படியே மாற்றுப் பாலினத்தவர்கள் அங்கீகரிக்கப்படுவர் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.