நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், தரையிறங்க 2.1 கிலோமீட்டரே இருந்தபோது நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. நேற்று மதியம் சந்திரயான் 2இன் ஆர்பிட்டார் (வட்டமடிப்பான்) அனுப்பிய புகைப்படத்தில் நிலவின் மேற்புறத்தில் விக்ரம் லேண்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் அறிஞரும் சந்திரயான் 1 விண்கலத்தில் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், "நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்திருப்பதால், இப்போது விக்ரம் லேண்டரை நாம் தொடர்புகொள்ள முயல வேண்டும். திட்டமிடப்பட்டிருந்த இடத்தைவிட்டு சுமார் ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் தற்போது லேண்டர் தரையிறங்கியுள்ளது. அந்த இடம் தரையிறங்க ஏதுவானதவல்ல" எனக் கூறினார்.
மேலும், லேண்டரை தொடர்புகொள்ளும் முறையைப் பற்றி விளக்கிய மயில்சாமி அண்ணாதுரை, "சந்திரயான் 2 விண்கலத்திலுள்ள லேண்டரும் ஆர்பிட்டாரும் எப்போதும் தொடர்பில்தான் இருக்கும். நாம் இப்போது ஆர்பிட்டரிலிருந்து சிக்னலை (சமிக்ஞை) அனுப்பி, அதை லேண்டர் பெறுகிறதா என சோதிக்க வேண்டும்.
இதைச் செய்ய 5 முதல் 10 நிமிடங்கள் வரையே அவகாசம் இருக்கும். மேலும் லேண்டர் இருக்கும் இடத்தின் அருகில் ஆர்பிட்டரை கொண்டு வர வேண்டும்" என்றார்.
இவை அனைத்தும் மிக சிக்கலான செயல்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், ஆனால் இதைச் செய்யக்கூடிய வலிமை நமது இஸ்ரோ அறிவியல் அறிஞர்களுக்கு உள்ளது என்று நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை விதைத்தார்.