பிரபல ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனம், ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டை புதிதாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும் ஏர் இந்தியாவின் பிராணட் தூதர் ஆவர். உங்களின் செயல்பாடுகளும் நடத்தைகளும் ஏர் இந்தியாவை பாதிக்கும். எனவே ஊழியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஊழியர்கள் நிச்சயம் தங்களது தாடியை ஷேவ் அல்லது ட்ரீம் செய்துகொண்டு பணிக்கு வர வேண்டும். ஆண் ஊழியர்கள் முறையான கால்சட்டை, சட்டைகளை அணிய வேண்டும். பெண் ஊழியர்கள் முறையான இந்திய அல்லது மேற்கத்திய உடைகளை அணிய வேண்டும்.
அதன்படி, டி ஷர்ட், போலோஸ், கிழிந்த ஜீன்ஸ், செருப்புகள், ஃபிளிப் ஃப்ளாப்ஸ், மிகவும் இறுக்கமான அல்லது சிறிய ஆடைகள், டிரான்ஸ்பரன்ட் டிரஸ் போன்றவற்றை அணிய தடை விதிக்கப்படுகிறது. ஊழியர்கள் அணியும் ஆடைகள் அனைத்தும் சுத்தமாகவும், அயர்ன் செய்தும் இருக்க வேண்டும். தலைமுடி கலைந்து இருக்கக் கூடாது.
மேலும், அனைத்து ஊழியர்களும் தனிப்பட்ட சுகாதார நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். சரியான உடையும் தோற்றமும் பராமரிக்கப்படும்போது ஒவ்வொரு பணியாளரும் தங்களது சிறந்த குணத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை கட்டுபாட்டை மீறி ஊழியர்கள் செயல்பட்டால், நடவடிக்கை எடுக்கும் உரிமை நிர்வாகத்திடம் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.