மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஈடுபடத் தொடங்கினார். இதையடுத்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இதற்கிடையே, மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இதில் ஐந்து கட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
தற்போது, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது மூன்றாவது அணி கனவை நினைவாக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, சந்திரசேகர ராவ் நேற்று சந்தித்து பேசினார். திமுக தலைவர் ஸ்டாலினை, அவர் வரும் 13ஆம் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் இடையேயான சந்திப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என, சந்திரசேகர் ராவின் மகளும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.பியுமான கவிதா தெரிவித்துள்ளார்.