பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாள்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ஆளும் பாஜக, ஐக்கிய ஜனதா தள கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி போட்டியிடுகிறது. இரண்டு கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், பரப்புரையின்போது நிதிஷ்குமார் தகாத வார்த்தைகளில் பேசியதன் மூலம் அவரின் தோல்வி உறுதியாகியுள்ளது எனக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "நிதிஷ்குமார் தோல்வியடைவது உறுதியாகியுள்ளது. எனவேதான் தரம் தாழ்ந்த விமர்சனத்தில் ஈடுபட்டுவருகிறார். முன்பெல்லாம் அமைதியாக இருப்பார்.
ஆனால், இப்போது இளைஞர்களை அச்சுறுத்தும்விதமாக பேசி, பேரணிகளிலிருந்து வெளியேற்றிவருகிறார். சிராக் பாஸ்வானுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளின் மூலம் அவர்களின் மனநிலை வெளிப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக கட்சிகள் தரம் தாழ்ந்த விமர்சனத்தில் ஈடுபட்டுவருகின்றன. நட்டாவின் பேரணிகள் காலியாக உள்ளன" என்றார்.