டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நிர்பயா பாலியல் வழக்கு விவகாரத்தில் டெல்லி அரசு தனது பொறுப்புகளை சரியாகச் செய்துவருகிறது. நாங்கள் கருணை மனுவை சில மணி நேரங்களுக்குள் அனுப்பினோம். எனவே குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துவதில் டெல்லி அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்றார்.
டெல்லி அரசு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதப்படுத்துகிறது என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் குற்றம் சுமத்தியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கெஜ்ரிவாலிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கெஜ்ரிவால், “அவர் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார், அது நல்லது அல்ல” என்று கூறினார்.
2012ஆம் ஆண்டில் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள், இன்று அவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக தனது மகளின் மரணத்துடன் விளையாடுகிறார்கள் என்று நிர்பயாவின் தாய் கூறியதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்த கெஜ்ரிவால், ”அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். எங்கள் அரசாங்கம் ஏன் தாமதப்படுத்த முயற்சிக்க வேண்டும், அவர்கள் விரைவாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கும் டெல்லி அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இல்லை" என்றார்.
முன்னதாக மத்திய அமைச்சர் ஜவடேகர், “2017இல் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்த உடனேயே, ஆம் ஆத்மி அரசு விரைவாகச் செயல்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தால், நான்கு குற்றவாளிகளும் இப்போது தூக்கிலிடப்பட்டிருப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை தாமதம்: ஆம் ஆத்மி மீது பாஜக குற்றச்சாட்டு