நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது தொடர்பாகவும், நாட்டு மக்களிடமும், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலமும் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கலந்துரையாடி இருந்தார்.
இந்தநிலையில், இன்று வீடியோ செய்தி ஒன்றை வெளியிடுவதாகப் பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் அறிவித்திருந்தார். அதன்படி, காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ வடிவில் பிரதமர் உரையாட தொடங்கினார். அப்போது," நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவரும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.
கரோனா வைரஸ் தொற்றை எதிர்ப்பதில், நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து யுத்தம் நடத்துவதற்கு நன்றி. ஏப்ரல் 5ஆம்தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டுகளிலுள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டிலுள்ள நான்கு மூலைகளிலும் ஒளியைப் ஒளிரச்செய்யும் வகையில், டார்ச், அகல்விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்.
இந்தச் செயலை மேற்கொள்ளும்போது, 9 நிமிடங்கள் அமைதியாக இருந்து நாட்டு மக்கள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். ஊரடங்கை மதித்து நடந்துவரும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி.
வீட்டில் இருந்தாலும் தற்போது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நீங்கள் தனியாக இல்லை. நாடே உங்கள் பின்னால் இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 130 கோடி இந்தியர்களும் கரோனாவை விரட்டுவதில் ஒற்றுமை வலிமையைக் காட்ட வேண்டும். தனியாக இருந்தால் தான் இப்பிரச்னையை வெல்வதோடு, மீளவும் முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்களின் சேவையை கெளரவிக்கும்விதமாக, கடந்த மாதம் 22ஆம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒலி எழுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.