சடலமாக கிடந்த கணவனுக்கு முத்தமிட்டு, அவர் காதருகில் சென்று "ஐ லவ் யூ" என்று கதறி அழுத நிகிதாவை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அவர் என்கூடவே இருப்பது போல உணர்கிறேன். அவரது ராணுவ உடையை அணிந்து, அதே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் என் ஒரே லட்சியமாக உள்ளது என்று ஆழ்ந்த நம்பிக்கை பிடிப்புடன் சொல்கிறார் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் விபுதியின் மனைவி நிகிதா.
யாராலும் மறக்க முடியாத நாள் 2019 பிப்ரவரி 14, புல்வாமா தாக்குதலில் சரிந்து மாண்டனர் 44 வீரர்கள். இந்த தாக்குதல் நடந்து ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளவில்லை.
தீவிரவாதிகளுக்கும் நம் வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், ஒரு மேஜர் உட்பட 4 வீரர்கள் வீர மரணமடைந்தனர். 20 மணி நேரம் நடந்த அந்த சண்டையில் உயிரிழந்தவர்களில் விபுதி சங்கரும் ஒருவர். அப்போது அவருக்கு திருமணமாகி 9 மாதங்கள்தான ஆகியிருந்தது. அன்றைய தினம், இறுதி அஞ்சலியில் வீரர் விபுதியின் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. மனைவி நிகிதா கவுல் அங்கே வந்தார், கணவர் உடலையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தார். பிறகு அருகில் வந்து அவருக்கு முத்தமிட்டு, சடலத்தின் காதுக்கு அருகே சென்று ஐ லவ் யூ என்று சொல்லி கதறினார். கடைசியாக "ஜெய்ஹிந்த்" என்று வீரத்துடன் முழக்கமிட்டார். இதைப் பார்த்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கலங்கிவிட்டனர்.
2018 ஏப்ரல் மாதம்தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. கல்யாணம் ஆகி ஒரு வருடம்கூட முடியவில்லை, தங்களின் முதல் திருமண நாளை கொண்டாட இவர்கள் ஆவலுடன் காத்திருந்த வேளையில்தான், வீரர் விபுதி உயிரிழக்க நேரிட்டது. இந்நிலையில், நிகிதா ராணுவத்தில் சேர தயாராகிவிட்டார். குறுகிய கால பணி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரியாவதற்கான எழுத்து தேர்வை எழுதினார். மறைந்த ராணுவ அதிகாரியின் மனைவி என்ற அடிப்படையில், வயது வரம்பு அவருக்கு தளர்த்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். அது சம்பந்தப்பட்ட நேர்காணலிலும் கலந்து கொண்டார். இப்போது தகுதிப் பட்டியல் அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
விரைவில் ராணுவத்தில் இணைந்துவிடுவார். தாக்குதல் நடந்து ஒருவருடம் ஆன நிலையில், நிகிதாவின் இந்த முயற்சியும், விடாப்பிடி கொள்கையும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் பிறந்து, டெல்லியில் ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிகிதாவுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே இப்போதைய விருப்பம். விபுதியின் ராணுவ உடையை அணிந்து, அதே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் ஒரே லட்சியமாக உள்ளது.
இதற்காகத்தான் ஏற்கனவே பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இது தொடர்பாக பிரபல தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த நிகிதா, புத்திசாலித்தனம், ஒழுக்கத்தின் மறுஉருவம்தான் விபு... அன்பு, இரக்கம், தைரியம், அடுத்தவருக்கு உதவி செய்தல் என எல்லாவற்றிலும் சிறந்தவர். நிச்சயம் அவரை பெருமைப்படுத்துவேன். நான் வாழும் வரை எங்கள் காதலும் மறைந்துபோகாது. அவர் என்கூடவே இருப்பது போல உணர்கிறேன். என்னுடைய இந்த முடிவுதான் நான் அவருக்கு செலுத்தும் நிஜமானஅஞ்சலி என்கிறார். தாங்க முடியாத வேதனை, வலிகள் எவ்வளவோ இருந்தாலும், நிகிதா ராணுவத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டது வரவேற்கத்தக்கது. இவர்களின் காதலும் பிரமிக்கத்தக்கது.