கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து, மத ரீதியாக, ஒரு பிரிவினரைப் புண்படுத்தியதாகத் தெரிகிறது.
இதனால், ஏற்பட்ட கலவரத்தில் எம்எல்ஏ அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தியின் வீடு சூரையாடப்பட்டு, அப்பகுதியில் உள்ள டி.ஜே. ஹள்ளி, கே.ஜி. ஹள்ளி காவல் நிலையங்கள் அடித்து உடைக்கப்பட்டன. கலவரத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
இது தொடர்பான வழக்கை கடந்த செப். 23ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கலவரத்தின்போது சம்பவ இடத்திலிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜமீர் அகமது கான், ரிஸ்வான் அர்ஷத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்து வெளியே வந்த ஜமீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "என்ஐஏ நேற்று (அக்.14) எங்களிடம் வன்முறை தொடர்பாக விசாரித்தார்கள். ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு 9.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நாங்கள் அங்கு இருந்ததால், அந்தக் கும்பலைத் தூண்டியது யார் என்று கேள்வி எழுப்பினர்" என்றார்.
இதனிடையே, வன்முறை தொடர்பாக சயீத் சதிக் அலி (44) என்பவரை என்ஐஏ கைது செய்துள்ளது. என்ஐஏ தவிர, பெங்களூரு நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவும் இந்த வழக்கை ஒருங்கிணைந்த முறையில் விசாரித்துவருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் மேயர் ஆர். சம்பத் ராஜ், அப்துல் ரக்கீப் ஜாகிர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் எனக் கூறி சி.சி.பி. 850 பக்க பூர்வாங்க குற்றப்பத்திரிகையை நகர நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நவராத்திரி விழா 2020: பத்மநாபபுரத்திலிருந்து புறப்பட்ட சுவாமி விக்கிரக ஊர்வலம்