புல்வாமா தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட இர்ஷாத் அஹமத் ரேஷியின் வீடு, பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறி என்ஐஏ அலுவலர்களால் சீல் வைத்து முடக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஜம்மு-காஷ்மீர், புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இர்ஷாத் அஹமத் ரேஷி என்பவர் தான் முக்கியக் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது வீடு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறி, என்ஐஏ அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து என்ஐஏ அலுவலர்கள் கூறுகையில், “சட்டவிரோத தடுப்புச் சட்டம் 1967, பிரிவு 25இன் கீழ் இந்த வீட்டினை விற்கவோ, மாற்றாவோ கூடாது என சம்மன் வழங்கியுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டுள்ள இர்ஷாத், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்காக களத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும் அவர் பயங்கரவாத அமைப்புகளுக்கு உறைவிடம் வழங்கியுள்ளதோடு போக்குவரத்து வசதியும் செய்து கொடுத்துள்ளார். சில நேரங்களில் உளவு வேலையும் பார்த்துள்ளார்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கம், கேரளாவில் அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்த 9 நபர்கள் கைது!