இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி உள்பட மூன்று பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், "முக்கிய பிரச்னைகளான வறுமை உள்ளிட்ட பிரச்னைகளை தேசியவாதம் மடைமாற்றம் செய்கிறது. குறைந்தபட்ச வருவாய் உறுதி செய்யும் திட்டம் இந்தியா போன்ற நாடுகளுக்கு அவசியம் தேவைப்படுகிறது. பொருளாதார முன்னேற்றம், தேசியவாதம் போன்ற இந்தியாவின் அடிப்படை கருத்தாக்கம் தொடர்புடைய விவாதங்களில் மாற்றுக் கருத்து இருக்க வேண்டும்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்தபோது இந்திய அரசியல் குறித்த பார்வை எனக்குத் தெளிவானது. அரசியல் எவ்வளவு முக்கியம் என்பதை பல்கலைக்கழகம் எனக்கு கற்றுத் தந்தது. மேற்குவங்கத்திலிருந்து வந்ததால் இடதுசாரி அரசியல் பற்றிய அறிமுகம் எனக்கு இருந்தது" என்றார்.