அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலிருந்து வெளியாகும் அதிநவீன நானோ உயிரியல் தொழிற்நுட்ப ஆய்வுகள் குறித்துப் பேசும் 'நானோ லெட்டர்ஸ்' ( Nano Letters) எனும் மருத்துவ இதழில் ஜூன் 17ஆம் தேதியன்று இதுதொடர்பாக ஆய்வு கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆய்வை, கலிபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள், பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இணைந்து நடத்தியுள்ளனர்.
கொடிய கரோனா வைரசின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி, அதனை நானோ ஸ்பாஞ்சஸ் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது குறித்தெல்லாம் அதில் விளக்கப்பட்டுள்ளது. நானோ லெட்டர்ஸில் வெளியான அந்த ஆய்வுக் கட்டுரையில், ”நானோ நுண்துகள்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, கார்பன் பல்லுறுப்பு கட்டமைப்பைக் கொண்டதுதான் 'நானோ ஸ்பாஞ்சஸ்' என அழைக்கப்படுகிறது.
இந்த நானோ ஸ்பாஞ்சஸ் மனித நுரையீரலிலுள்ள உயிரணுக்களிலுள்ள செல்களைச் சிதைக்கும் சார்ஸ் கோவிட்-2 (SARS-CoV-2) வைரசை ஈர்த்து, நடுநிலையாக்கி, இனப்பெருக்கம் செய்யும் அதன் திறனை அழித்து செயலிழக்கச் செய்வதையும் அவை மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் நோய்க்கிருமிகளையும் முற்றிலும் அழிப்பதையும் நிரூபிப்பதே இந்த நவீன ஆய்வின் நோக்கம்" எனத் தெரிவித்துள்ளனர்.
அதனை உருவாக்கிய சான் டியாகோ பொறியியலாளர்களும் இந்தக் கூற்றையே முன்மொழிந்தனர். யு.சி. சான் டியாகோ ஜேக்கப்ஸ் நானோ பொறியியல் கல்லூரி இதனைத் தங்களது ஆய்வகச் சோதனைகளில் உறுதியும் செய்திருப்பதாகச் சொல்கின்றனர்.
இதுதொடர்பாகப் பேசிய யு.சி. சான் டியாகோ ஜேக்கப்ஸ் பொறியியல் கல்லூரியின் நானோ பொறியியல் துறை பேராசிரியர் லியாங்பாங் ஜாங், "தற்போது வேகமாகத் தொற்றைப் பரப்பும் கோவிட்-19 வைரஸ்கள் படையெடுத்து தாக்கும் ஆரோக்கியமான செல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்த நானோ ஸ்பாஞ்சஸ் ஈடுபடும். அந்த வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் இதன் சிறப்பம்சமாகும். தொற்று நோய்களுக்கான மருந்துகளை உருவாக்குபர்கள், மருந்தின் செயல்வீரியம் எவ்வாறு அமைய வேண்டுமென்பதை முடிவு செய்ய, நோய்க்கிருமி குறித்த விவரங்களை ஆழமாக ஆராய்ச்சி செய்கிறார்கள்.
அதிலிருந்து மாறுபட்டது எங்கள் அணுகுமுறை. இலக்கு செல்கள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, உயிர்வேதியியல் செயல்முறைகளைப் பிரதிபலிக்கும் குறிக்கும் சிதைவுகளை, அதில் உருவாக்குவதன் மூலம் இலக்குகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்திலேயே முதன்முதலில் நானோ ஸ்பாஞ்சஸ் உருவாக்கிய பேராசிரியர் ஜாங்கினின் ஆய்வகம், அன்றிலிருந்து பலவிதமான பயன்பாடுகளுக்காக அதை மெருக்கேற்றி மனித குலத்தின் நன்மைக்காகப் பயன்படுத்திவருவது கவனிக்கத்தக்கது.
கோவிட்-19க்கு எதிரான போரில் அதனை வீழ்த்த சர்வதேச நாடுகள் தடுப்பூசி எனும் ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் வேளையில், கலிஃபோர்னியா-பாஸ்டன் ஆராய்ச்சியாளர்களின் இந்த 'நானோ ஸ்பாஞ்சஸ்' உயிரியல் ஆய்வு பெரும் கவனத்தை ஈர்த்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.