ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்குப் பிறகு, இருபெரும் சக்திவாய்ந்த நட்பு நாடுகளின் தலைவர்கள் கூடும் நிகழ்ச்சியை உலகம் பார்க்க உள்ளது. அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் அந்நாட்டு முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் அரசுமுறைப் பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் 1.25 லட்சம் பேர் கூடவுள்ளனர். இதற்காக, குஜராத் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு வரவுள்ள 1.10 லட்சம் பேர் மைதானத்தின் காலரிகளில் அமர்வதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள் உள்பட மீதமுள்ள 10 ஆயிரம் விவிஐபிக்கள் அமர்வதற்கு மைதானத்தின் நடுவே மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகமே திரும்பிப் பார்க்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியைக் காண 50 ஆயிரம் அமெரிக்க இந்தியர்கள் ஒன்று கூடினார்கள். அமெரிக்காவில் ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் காண அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடியது இதுவே முதல்முறையாகும். இதேபோன்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது. பாதுகாப்பு, வணிகம் உள்பட பல துறைகளின் கீழ் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு முன்பு, அகமதாபாத் விமான நிலையம் சபர்மதி ஆசிரமம் இடையேயான 10 கிமீ தூரத்தை மோடியும் ட்ரம்பும் சாலை பரப்புரை மேற்கொண்டு கடக்கவுள்ளனர்.
ஆசிரமத்தைச் சென்றடைந்த பிறகு, காந்தி பயன்படுத்திய ராட்டையை ட்ரம்பும் அவரது மனைவியும் இயக்கி பார்வையிடவுள்ளனர். அப்போது, காந்திக்குப் பிடித்தமான 'வைஷ்ணவ ஜனதோ' பாடல் ஒலிக்கப்பெறவுள்ளது.
இதையும் படிங்க: அதிக வெப்பநிலையை தாங்குமா அமெரிக்காவின் முதல் குடும்பம்?