மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதி கரோனா பெருந்தொற்று அதிகம் பரவிய சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆஷாபாய் சோராசியா (85) என்ற மூதாட்டி உயிரிழந்தார்.
கரோனா தீநுண்மி (வைரஸ்) பரவலின் அச்சம், ஊரடங்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் சொந்த உறவினர்கள்கூட ஆஷாபாயின் இறுதிச் சடங்கிற்கு வரத் தயக்கம் காட்டினர்.
இந்த இக்கட்டான சூழலில் சமூக செயற்பாட்டாளர் ரெஹான் கோல்டன், அவருடைய இஸ்லாமிய நண்பர்கள் இணைந்து கரோனா விதிமுறைகளுடன் ஆஷாபாய்க்கு இறுதிச் சடங்கு செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து, ரெஹானின் நண்பர்கள் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன், தங்களது தோள் மீது ஆஷாபாயின் உடலை சுமந்துசென்று சுபாஷ்நகர் இடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்தனர்.
இது குறித்து ஆஷாபாயின் உறவினர் மனோஜ் கூறுகையில், “என்னுடைய உறவினர்கள்கூட கரோனா பெருந்தொற்றுக்கு பயந்து உதவ முன்வரவில்லை. ஆனால், என் பக்கத்துவீட்டுக்காரர்கள் சாதி, மதம் கடந்து எங்களுக்கு உதவியுள்ளனர்” என்றார்.
சமூக செயற்பாட்டாளர் ரெஹான் கூறும்போது, "தேவையிருக்கும் மக்களுக்கு உதவவுவது எங்களின் கடமை. இதை போபால் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த நாகரிகம். மிக முக்கியமாக தர்மம், இறைத்தேடல் மிகுந்த ரமலான் மாதம், எங்களை ஆஷாபாய்க்கு உதவ தூண்டியது” என்றார்.
இதையும் படிங்க: கடனுக்கு ஈடாக வைத்த ஆவணங்களை திருப்பித்தர கையூட்டு பெற்ற வங்கியாளர் கைது