இந்தூரிலிருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷில்லோடா என்ற கிரமம், மத்திய பிரதேசத்தின் நீல கிராமம் என்று அழைக்கப்படுகிறது. நகரின் அனைத்து வீடுகளும் நீல நிறத்தில் அமைந்துள்ளதால், அந்த கிராமம் இந்த பெயரைப் பெற்றுள்ளது.
இந்த அழகிய வீடுகளின் நீல நிறங்களுக்கு, மற்றொரு அர்தமும் உண்டு. அதாவது இந்த நீல நிறம், நெகிழி இல்லா இடத்தையே குறிக்கிறது. அதுமட்டுமல்ல இக்கிராமத்திலுள்ள அனைத்து சுவர்களும் நெகிழி எதிர்ப்பு வாசகங்களால் நிறைந்துள்ளன. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளன்று, 385 வீடுகளைக் கொண்ட இந்த ஷில்லோடா கிரமத்தை நெகிழி இல்லா கிராமமாக மாற்ற இப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து நெகிழியால் வரும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலில் கிராம பஞ்சாயத்து ஈடுபட்டது. இதனால் வெறும் 80 நாள்களில் நெகிழி இல்லா கிராமமாக நீல கிராமம் உருவெடுத்தது. நெகிழி தடையினால் தொடக்கத்தில் பெரும் சிக்கல்களைச் சந்தித்த இந்த கிராம மக்கள், விரைவிலேயே சுற்றுச்சூழலுக்கு உகந்த நெகிழி பைகளை உபயோகிக்கத் தொடங்கினர்.
ஒருமுறைப் பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருள்களை பயன்பாட்டிலிருந்து நீக்க, ஆக்காங்கே குப்பைத்தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. கிராமத்தில் நெகிழி பயன்பாடு இல்லை என்பதை உறுதி செய்ய பத்து கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளனர். மக்களை ஊக்குவிக்கும் வகையில், கிராம பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகேயுள்ள மரத்தை காகிதப் பைகளைக் கொண்டு அலங்கரிக்கவும் உள்ளனர்
“உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக முதலில் நீங்கள் இருங்கள்” என்ற காந்தியின் தத்துவத்தைப் பின்பற்றியுள்ள 'நீல கிராமம்', தூய்மை இந்தியா திட்டத்தை நனவாக்க பெரும் முயற்சி செய்கிறது.
இதையும் படிங்க: நெகிழிப் பயன்பாட்டை குறைக்க இல்லத்தரசியின் முயற்சி!