ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட நாட்டின் 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. இதில் பாஜக 303 இடங்களில் வெற்றி வாகை சூடி தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது.
இந்நிலையில், நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் கேபினெட் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 24 பேர், இணை அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 24 பேர், தனிப் பொறுப்பு வழங்கப்பட்ட 9 பேர் என மொத்தமாக 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில் தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 24 கேபினட் அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்பு அமைச்சர்களின் இலாக்கா வெளியிடப்பட்டுள்ளது.
கேபினெட் அமைச்சர்கள்
ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத் துறை
அமித் ஷா - உள்துறை
நிதின் கட்கரி - சாலை போக்குவரத்துத் துறை
சதானந்த கவுடா - உரத்துறை
ராம்விலாஸ் பஸ்வான் - உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை
நிர்மலா சீதாராமன் - நிதித்துறை
நரேந்திர சிங் தோமர் - விவசாயத் துறை
ரவிசங்கர் பிரசாத் - சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்துதல் துறை
எஸ்.ஜெய்சங்கர் - வெளியுறவுத் துறை
ஸ்மிருதி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
ஹா்ஷவர்தன் - சுகாதாரத் துறை
பிரகாஷ் ஜவடேகர் - வனத்துறை
பியூஷ் கோயல் - ரயில்வே துறை
தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத் துறை
முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறை
பிரஹலாத் ஜோஷி - நிலக்கரித் துறை
கிரிராஜ் சிங் - கால்நடைத் துறை
தாவர்சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
மகேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாடு
அரவிந்த் சாவந்த் - கனரக தொழில் துறை மற்றும் பொது தொழில்துறை
கஜேந்திர சிங் ஷெகாவத் - நீர்மின் சக்தி துறை
ரமேஷ் போக்ரியால் - மனிதவள மேம்பாட்டுத் துறை
அர்ஜுன் முண்டா - பழங்குடியின நலத்துறை