கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துவந்தாலும், டெல்லியில் கரோனாவின் மூன்றாவது அலை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாள்களாகவே அங்கு அதிக பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது.
தற்போது டெல்லியில் தினசரி 27 ஆயிரம் பேருக்கு கரோனாவை கண்டறியும் RT-PCR சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 37,200ஆக உயர்த்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு மத்திய உள் துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சகம் தனது ட்விட்டரில், "உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் டெல்லியில் மேற்கொள்ளப்படும் RT-PCR கரோனா பரிசோதனைகளை 27 ஆயிரத்திலிருந்து 37,200 ஆக உயர்த்தியுள்ளது.
டெல்லியில் நவம்பர் 15ஆம் தேதி் 12,055 பேருக்கு RT-PCR கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நவம்பர் 19ஆம் தேதி இந்த எண்ணிக்கை 37,735ஆக உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,608 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 13 கோடி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் நாடு முழுவதும் 10,66,022 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டன.
இதையும் படிங்க: 2024இல் இந்தியர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு!