குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தகாஷாஷிலா கட்டடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அக்கட்டடத்தில் இரண்டாவது மாடியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. வகுப்பில் மாணவர்கள், சிறுவர்கள் பலர் இருந்துள்ளனர்.
கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். விபத்தில் மாடியில் இருந்து கீழே குதித்தவர்கள் பலர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர்.
மேலும் விபத்து எவ்வாறு ஏற்பட்டது, தீ எவ்வாறு பரவியது போன்றவற்றைவை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உறுதியாக தெரியாத நிலையில், மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.