இந்தியாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்க ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது நீண்டதூர பயணிகளுக்கு களைப்பு தெரியாமல் இருக்க ரயில்களிலேயே மசாஜ் சென்டர்களை கொண்டு சேவை செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாகவும், இந்த சேவையின் முதற்கட்டமாக இந்தூரில் இருந்து மத்தியப் பிரதேசம் செல்லும் 39 ரயில்களில் இது செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும் ரயில்வே சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பயணம் மேற்கொள்ளும்போது மசாஜ் சேவை செய்யும் வகையில் பணி ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், இந்த மசாஜ் சேவைக்கு நபருக்கு தலா ரூ. 100 வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
ரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்குவது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இந்தத் திட்டம் ரயில்வே துறையின் வருமானத்தை உயர்த்துவதோடு மட்டுமின்றி, ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது. இந்த சேவை மூலம் ரயில்வே அமைச்சகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும் என்றும், இதன்மூலம் ரூ. 90 லட்சம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் எனவும், இந்தச் சேவைக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சேவையானது விரைவில் அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.